மெய்யில் உறைந்த வனமலரே -03

 


அத்தியாயம் -03


    அதிகாலை பனிக்காற்று சாரளத்தின் வழியே வீச, டைலர் ஸ்விப்ட் குரலில் லாஸ்ட் இன் தி லைட் பாடல் மெல்லிய சத்தத்தில் அவ்வறையில் ஒலித்துக் கொண்டிருந்தது.


       மெத்தை முழுவதும் பரப்பி வைக்கப்பட்ட பொருட்களில், தன் கையடக்க கேமராவில் பதிவான காட்சிகள் அனைத்தையும் தனது ஆப்பிள் லேப்டாப்பில் பதிவேற்றி, அறிக்கையை தயார் செய்ய ஆரம்பித்தாள் வநிதாஷினி.


    நிமிடங்கள் அதில் கரைந்து போக, அவள் எதிர்பார்த்த அளவு அனைத்தும் தயாராகி முடியவே, கைகளை தூக்கி சோம்பல் முறித்தாள். கலைந்திருந்த கொண்டையை அவிழ்த்து இறுக்கமாக முடிந்து கொண்டவள்.


       கட்டிலில் பரப்பி வைக்கப்பட்ட அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு,அதில் விழுந்தவள்.


      வலது காலை மேலே தூக்கி பார்க்க, வீக்கம் நன்றாக வற்றி இருந்தது. கட்டும் பிரிக்கப்பட்டு அவ்விடம் லேசாக கன்றி போயிருந்தது.அதை மெல்ல வருடி விட்டவள்.


    அலைபேசி சத்தமிட எடுக்கவே, எதிர்புறம் பட்டாசாக புரிந்து தள்ளியது.


    " ஓ அண்ணி சொல்லிட்டாங்களா மா "என்று அவள் அலுப்பாக கேட்க,


     " இதெல்லாம் உனக்கே நியாயமா இருக்கா?. இந்த வேலையெல்லாம் உனக்கு தேவைதானா. ஒழுங்கா வந்து இங்கே செட்டில் ஆகிறது விட்டுட்டு என்ன இது" என்றவரின் கடுகடுப்பில், போனை ஸ்பீக்கரில் மாற்றி அதை பெட்டில் போட்டுவிட்டு,


     இன்று செல்ல போகும் பயணத்திற்கான உபகரணங்களை தன் பேக்கில் சீராக அடுக்க ஆரம்பித்தாள்.


   " சொல்றதை கேக்கறதே இல்லை. எல்லாம் உங்க அப்பா கொடுக்கிற செல்லம் " என்று இன்னும் கோபத்தில் கத்தி கொண்டிருக்கும் போதே,இடையில் பாப்பா என்றவரின் வாஞ்சையான அழைப்பில் வநிதாஷினி இதழில் கீற்றான புன்னகை.


    ஸ்பீக்கரில் இருந்து எடுத்து விட்டு போனை காதில் வைக்க, " அம்மாவை பத்தி தான் உனக்கு தெரியுமே. கண்டுக்காத குட்டி மா " என்றதும்,


      அதற்கு அவளின் தாயோ, " இப்படி சொல்லியே நல்லா கெடுத்து விடுங்க.ஏற்கனவே என் பேச்சை மதிக்க மாட்டாள். இதில் இப்படி பேசினா எங்கே " என்று அவர் புலம்ப, 


     அதற்கு அவள் அண்ணி சமாதானப்படுத்துவது தெரிய, இடையே குழந்தையின் சிணுங்கல் குரல்.


    " விசு முழிச்சுட்டானா. எங்கே போனை அவன்கிட்ட குடுங்க" என்று மற்றதை மறந்து மருமகனிடம் தாவ,


  " இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்லை. இவ்வளவு பாசம் இருக்கிறவ வந்து குழந்தையை பார்க்க வேண்டியதுதானே. பிறந்தப்ப பத்து நாள் இருந்ததோட சரி " என்று அங்கலாய்ப்பாக கூறிக்கொண்டு, முகத்தை சுளிப்பதை இங்கிருந்தே அவளால் உணர முடிந்தது.


    சிறிது நேரம் அவன் மழலை மொழியில் இழைத்தவள். 

    

    தமையன் மகன் விஷ்வா அழுக, " நான் பார்த்துக்கிறேன் மா. நீ பேசு" என்று அவள் தந்தை அங்கிருந்து பேரனுடன் செல்ல, போனை கைப் பற்றிய அமிர்தா, "அத்தை சொல்றதில் தப்பில்லையே நிதா. நீ மட்டும் அங்கு தனியா எதற்கு?" என்று இழுத்தாள்.


     நாத்தனாருக்கு இந்த செய்தி பிடிக்காது என்று தெரிந்தாலும்,அவள் ஒற்றையாக அங்கு இருப்பது மனதிற்குள் ஏதோ செய்தது .


    " வெக்கேஷன், ஹாலிடேஸ்க்கு சுவிஸ் வரது ஓகே. ஆனால் அங்கேயே ஸ்டே பண்றது எல்லாம் சான்சே இல்லை" என்றவள். சாதாரண போல் கூறினாலும் அதில் உறுதி தெரிந்தது.


    " நிதா அங்கே யாரு இருக்காங்க" என்று நிதர்சனத்தை கூற,


     " ஓ காட். பெரியம்மா சுவிஸ்க்கு போனது தான் போனாங்க. ஒவ்வொரு டிக்கெட்டா அங்கே போய் செட்டில் ஆகிட்டீங்க"

என்று சலித்துக் கொண்டாள்.


     அவளின் உறவினர்கள் இப்பொழுது மொத்தமாக சுவிஸ்சில் தான் குடியேறி உள்ளனர்.


     அண்ணன் நிஷாந்த் வேலை கிடைத்து சுவிஸ் போனதும், வருடத்தின் பாதி நாட்கள் அவர்களின் அன்னைக்கு அங்கு தான் வாசம். அதுவும் பேரன் பிறந்ததும் ஜாகையை மொத்தமாக அங்கு மாற்றிக் கொண்டார்.


     மனைவி எவ்வழியோ கணவனும் அவ்வழியே என்பது போல் ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியரான நிஷாந்த் மற்றும் நிதாவின் தந்தையான ராமமூர்த்தியும் மனைவி உடன் சென்று விட, முரண்டு பிடித்தது என்னவோ வநிதாஷினி தான். 


    அவள் தனது ஆராய்ச்சி படிப்பை இங்குதான் தொடர்வேன் என்று கட்டாயமாக சொல்லிவிட, பலவித முணுமுணுப்பு, மறுப்புகளுக்குப் பிறகு அமிர்தாவின் தந்தை பரிந்துரையின் பெயரில் அவளுக்கு முதுமலை காட்டில் ஆராய்ச்சி செய்ய அனுமதி கிடைத்திருக்கிறது. அதுவும் பத்து மாதங்கள் தான்.


   வேண்டவே வேண்டாம் என்று மறுத்த சாந்தினி சிடுசிடு உடன் என்றாலும் அனுமதி அளித்ததற்கு, முக்கிய காரணமே அவர் இட்ட கோரிக்கையை மகள் நிறைவேற்றுவார் என்று ராமமூர்த்தி உறுதி அளித்ததால் மட்டும்தான்.


  தங்களுடனே மகளையும் தங்க வைக்க, தேவையான அத்தனை ஏற்பாடுகளையும் சாந்தினி தன் மருமகள் மற்றும் மகனுடன் இணைந்து சீராக செய்து கொண்டிருக்கிறார்.


    அதற்குள் வேலையை விட்டு நிஷாந்த் வர அவனிடமும் பேசி விட்டு போனை வைத்தவள்.


      தங்களுக்கு அத்தனை பெரியதாய் சென்னையில் வீடு இருக்கும்போது சுவிஸில் தங்கியது ஏற்புடையதாக இல்லை.இதில் வீட்டை விற்கும் பேச்சு வார்த்தை நடப்பது புரிய பல்லை கடித்தாள்.


      அதற்குள் கையில் கட்டி இருந்த வாட்ச் வைப்ரேட் ஆகவே நேரமானதை உணர்ந்து தன் பேக்கை முதுகில் மாட்டிக்கொண்டு புறப்பட்டாள். காலில் அழுத்தம் தரும்போது வலி இருந்தாலும் அதை பொருட்படுத்தவில்லை.


    அதிகாலை மெல்லிய குளிர் காற்று வீச அதனோடு வந்த மண்வாசனையும் ஆழ்ந்து சுவாசிக்க நுரையீரலுக்குள் இயற்கையின் சாரல்.


    இரவு முழுவதும் மெல்லிய பனியென மழை பெய்து கொண்டே இருந்ததில் சாலையின் ஓரம் தண்ணீர் தேங்கி நின்றது.


   சுட சுட ஆவி பறக்கும் டீயை குடித்துவிட்டு, சேட்டனிடம் ஒரு வார கால தகவலையும் சேகரித்துக் கொண்டு நேரே எலிபன்ட் கேம்பிற்கு தான் வந்தாள்.


       அவள் எதிரே தென்பட்ட சிவாவோ, "இன்னும் டூ டேஸ் கழிச்சு தான் வருவீங்கன்னு நினைச்சேன்" என்றான் இழுவையாக.


     " கால் சரியாயிடுச்சு. இனிமேல் ரூமில் என்ன பண்ண போறேன்" என்று கூறியவள். தனது கேமராவில் பதிவு செய்து கொண்டே அங்கிருந்து நகர, 


    சிறிது தயக்கத்திற்கு பிறகு," வெற்றி சார் உங்களை யானைங்க கிட்ட க்ளோசா அலோ பண்ண கூடாதுன்னு சொல்லி இருக்காங்க" என்று தயக்கமாக கூற, யானைகளின் கொட்டகைக்கு சென்று கொண்டிருந்தவளின் நடை நின்றது.


    தலையை மட்டும் திருப்பி ஒற்றைப் புருவத்தை கேள்வியாக ஏற்றியபடி, " புரியலை" என்றாள்.


    " டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ண சொல்லி இருக்காரு. யானையோட ஹெல்த் கண்டிஷனை டாக்டர் அரவிந்த் கிட்ட கேட்டுக்க சொல்லிட்டாரு. பாகன்கள் கிட்ட அதோட டெய்லி ஆக்டிவிட்டி கேட்டு, ரிப்போர்ட் கொடுத்தால் போதும்னு சொன்னாரு".


    அதில் ஏறிய கோபத்தில் முகம் சட்டென்று சிவந்தது.வாய்க்குள் வார்த்தைகள் அரைப்பட, "ஓ.நான் ஒப்புக்கு இருக்கணும்னு சொல்றீங்க" என்றதும் சிவா பதறினான்.


    "ஐயோ அப்படியெல்லாம் இல்லை. உங்களோட சேப்டிக்காக தான்" 


     "அந்த டேஷ் சேஃப்டி எல்லாம் எனக்கு தெரியும் ஐ ஹேவ் பர்மிஷன். என்ன நினைச்சீங்க.எதோ கண்ணில் பார்த்ததை எழுத சொல்றீங்க. இது என்னோட ப்ராஜெக்ட் ட்ரீம் ப்ராஜெக்ட் இதுக்காக நான் பல வருஷம் ஆர்டர் பண்ணி இருக்கேன்".


    " ரிசர்ச்னா என்னனு நினைச்சீங்க.அப்சர்வ் பண்ணனும். தொட பர்மிஷன் இல்லை ஓகே அது என்ன நான் டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணனும்.எனக்கு என்ன கொரோனாவா வாட் நான்சென்ஸ்.அதெல்லாம் பாலோ பண்ண முடியாது" என்று சிலுப்பிக்கொண்டு அவள் செல்ல,


     வெற்றி தன்னிடம் கூறிய கட்டளைகள் மீண்டும் செவியில் ஒலிக்க,' ரெண்டு பேருகிட்டயும் சிக்கிட்டு முழிக்கிறேன் ' என்று நொந்து கொண்டான். அந்த இள வன காவலன்.


    அவளை நெருங்காமல் தூரத்திலிருந்து கவனித்தவனுக்கு,ஒருவித கடுகடுப்புடன் அவள் வேலைகளை பார்ப்பது தெரிந்தது.


    இன்றும் யானைகளின் நடவடிக்கை அதன் காலைநேர குளியல், உணவு நேரம், மருத்துவ நேரம் என்று மதியம் வரை குறிப்புகள் எடுத்து அனைத்தையும் பதிவு செய்தவள். களைப்புடன் வந்த அமர்ந்ததும் மதிய உணவு சிவா வந்து அளித்தான்.


    " ஓ தேங்க்ஸ்" என்று மறக்காமல் வாங்கி உண்டாள்.


    பாகன்கள் பெரிய உயரமான யானைகளை அழைத்துக் கொண்டு செல்லவும் அங்கிருந்த மருதுவிடம், 


    "எங்க அழைச்சிட்டு போறாங்க" என்று வினாவினாள்.


     "அதுவா கும்கி பயிற்சி தர போறோம் மா "என்றதும்,


      " உண்மையாவா நானும் வரலாமா "என்றதும் அவள் கண்களில் கண்ட ஆர்வத்தில்," வாங்கம்மா இதில் என்ன இருக்கு" என்று தயக்கமின்றி அழைத்து சென்றான்.


    மோயாறு சத்தம் இன்றி ஓடிக்கொண்டிருக்க அதை கடந்து மறுபுறம் சமவெளி இருக்க, நன்கு தரை பன்படுத்தப்பட்டு இருந்தது.


    அதில் நடுத்தரமான யானைகளும் அளவில் பெரிதான யானைகள் என ஆறு யானைகள் நின்று இருக்க பாகன்கள், அதனிடம் கட்டளையாக ஏதோ சத்தமிட்டு கொண்டிருந்தனர்.


     ஆற்றை கடந்து வந்து அனைத்தையும் புகைப்படம் எடுக்க," உன்னை யார் இங்கே வர சொன்னா" என்ற அதட்டல் குரல் முதுகின் பின் கேட்டதில் பதறிக்கொண்டு கையில் வைத்திருந்த கேமராவை 

நழுவ விட்டு பின் இறுக்கிப் பிடித்தாள்.


   பச்சை நிற பேண்ட்,மேலே பழுப்பு நிற உடலை ஒட்டிய டி-ஷர்ட் அணிந்திருந்தவனின் உடல் வியர்வையில் குளித்திருந்தது.அவனின் அனல் மூச்சுக்காற்று அவளை சுட்டது.


    "பார்த்தால் தெரியலை. யானைகளை அப்சர்வ் பண்ணிட்டு இருக்கேன் "என்று அவன் விழிகளில் தெரிந்த கோபத்தை சிறிதும் கணக்கில் கொள்ளாமல் இயல்பாக பதில் அளிக்க,


    " இதுக்கெல்லாம் உனக்கு பர்மிஷன் இல்லை "என்று பற்களை கடித்த படி அவன் கூற,


    "நான் மருது கிட்ட கேட்டுட்டு தான் வந்தேன். சிவாக்கு கூட நான் வருது தெரியும். இதில் என்ன பர்மிஷன் இல்லாமல் போச்சு. ரெஸ்ட்ரிக்ட் ஏரியாவும் இது இல்லை. யானைகள் ட்ரைனிங் ஏரியா தானே "என்றதும் அவன் கோபத்தை அடக்குவது அவன் இறுகிய தாடையில் தெரிய,' எதற்கு இவனுக்கு இத்தனை கோபம் 'என்று சலுப்பானது.


   " சொன்னால் புரிஞ்சிக்கவே மாட்டியா. அப்படி என்ன அட வாதம். விலங்குகளுக்கு நீ பரிஷயம் இல்லாதவள். அவங்களோட தனிப்பட்ட நேரத்தில் உன்னை அனுமதிக்க மாட்டாங்க. ஆர்வம்னு சொல்லி நீ அகல கால் வைக்கிற ".


   " ஒரு ஸ்டெப் எடுத்து வைக்கிற இடத்தில் பத்து ஸ்டெப் எடுத்து வைக்கிற தடுமாறி விழ போற " என்று அவன் எச்சரிக்க அவள் முகத்தில் அப்பட்டமான சலிப்பு.


    அப்போது யானையின் பிளிறல் சத்தம் பக்கவாட்டாக கேட்க அசட்டையாக திரும்பியவளின் கண் முன்னே நஞ்சன் கோபத்துடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தது.


      அதன் துதிகை உயரவும் அதிர்ந்து, உடல் நடுங்க, அசையாமல் அப்படியே அவள் நின்று விட, நஞ்சனோ சிவந்த கண்களுடன் அவளை நோக்கி அடி எடுத்து வைத்தது.


 அதன் கண்களில் இருந்த ஒரு வித கோபம் பெண்ணவளின் தைரியத்தை விரட்டி இருந்தது.


   மருது என்ற அதட்டலுடன் நஞ்சன் வழியில் நின்றிருந்த நிஷாந்தினியின் இடையில் சுற்றி கரத்தை படர விட்டு அவளை அப்படியே வழியில் இருந்து அகற்றியவன். 


   பயிற்சி தளத்தை விட்டு அவளை இழுத்துச் செல்ல, மருதுவும் நஞ்சனை தன் சொற்களால் கட்டுப்படுத்தப் பார்த்தான் .


    முதல் சில பல கட்டளைக்கு செவிசாய்க்காமல் முன்னேற துடித்த யானையின் காலில் சங்கிலி கட்டி, மருது அதன் மீது இலாவகரமாக ஏறி காதின் அருகே அழுத்தத்தை தர, நஞ்சனும் மெல்ல மருதுவின் போக்கிற்கு நகர்ந்தான்.


     பயிற்சி களத்தை விட்டு வெளியே நகர்த்தி ஒரு மரத்தின் அடியில் அவளை நிற்கவைக்க இன்னும் அவன் கையணைப்பில் தான் இருந்தாள்.


     இதயம் தன் துடிப்பை அதிகப்படுத்த மொத்த உடலும் நடுங்கி வியர்த்து போனது.


     ஏனோ சொல்லில் வடிக்க முடியாத பயம் உடல் எங்கும் பரவி உச்சந்தலையில் பாரமாக ஏறியது.


    தலை அதன் கணத்தை தாங்க முடியாதது போல் சாயப் போக வெற்றியோ விடாமல்,அவளின் கன்னத்தில் தட்டினான்.


    அதில் ஏற்பட்ட வலியில் உணர்வுக்கு வந்தவள்.


    அவனை மலக்க மலக்க பார்க்க, அவள் பாவமான முகத்தை கண்டும் அவனின் கோபம் சிறிதும் குறையவில்லை.


    அவனின் இறுகிய கோபமான முகம் அத்தனை நெருக்கத்தில் தெரியவும் தான் தங்கள் இருவரின் இணைந்த நிலை புரிய, பதறிக்கொண்டு அவனை விட்டு பிரிந்து நகர்ந்தாள்.


    அவனை இயலாமையுடன் பார்க்க, அவள் முகம் கன்றல்,கோபம், நடுக்கம் எதையும் பொருட்படுத்தாமல், " உனக்கு புரியலையா?".

 


    "ஃபர்ஸ்ட் 10 டேஸ் கேம்பை நல்லா அப்சர்ப் பண்ணு. யானைகளோட அட்டாச் ஆகு. உன்னோட இன்டென்ஷன் சரியாக இருந்தால் யானைகள் உன்னை அருகில் அனுமதிக்கும். அதெல்லாம் உன் சாமர்த்தியம். உன்னோட அருகாமைக்கு யானைகள் பழகனும் அதை முதலில் செயல்படுத்த பாரு "


     " அதுக்கப்புறம் என்ன கோமாளித்தனம் எல்லாம் பண்ணுமோ பண்ணிட்டு போ. ஆனால் உன்னால் இங்க இருக்கிற வனவிலங்குகளுக்கு ஏதாவது ஒரு சின்ன பிரச்சனை ஏற்பட்டாலும் மன்னிக்கவே முடியாது. எவ்வளவு ஸ்ட்ராங்கான ரெக்கமண்டேஷன் இருந்தாலும் உன் காலடி கூட இங்கே பட விட மாட்டேன் " என்று உறுதியுடன் எச்சரிக்கையாகக் கூறினான்.


   "எதுக்கு சில்லுசில்லுன்னு என் மேல் எறிஞ்சு விடுறீங்க இதெல்லாம் சாதாரணம் தானே. இப்போ நான் ட்ரைனிங்க்கு வந்து முழுசா பத்து நாள் கூட முடியலை. அதுக்குள்ள எதுக்கு இவ்ளோ கோபத்தைக காட்டுறிங்க " எனப் பயம் தெளிந்து கோபத்துடன் அவனிடம் கேட்டாள்.


     "எக்ஸாக்ட்லி.வந்து 10 டேஸ் கூட ஆகலை. ஆனால் உன் முந்திரிக்கொட்டைத்தனம் அளவில் அடக்க முடியாததாக இருக்கு. இங்கு இருக்கிற விலங்குகளை பார்த்துக்கொள்வது தான் என்னோட வேலை. உன்னை இல்லை."என்று அவன் கூறியதும் மூக்கறுப்பட்டு போய் நின்றாள்.


முந்தைய பதிவு    அடுத்தப்பதிவு


Comments